இதய ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு மிகவும் அவசியமானது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி, முறையான தூக்கம் ஆகியவற்றுடன் சத்தான உணவுகளையும் உட்கொள்வது முக்கியம். அந்த வகையில், அன்றாட உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். அத்தகைய 3 முக்கிய பழங்கள் குறித்து பார்க்கலாம்.
புளூபெர்ரி பழத்தில் ஆந்தோசயனின் எனப்படும் சத்துகள் அதிகம் உள்ளன. இவை ஆன்டி ஆக்சிடென்டுகளாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
புளூபெர்ரியை தொடர்ந்து உட்கொள்வது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அவற்றின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்த நாளங்களின் உட்புறப் படலம் ஆரோக்கியமாக இருந்தால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும்.
ஆப்பிளில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைக் குறைக்க உதவக்கூடும். மேலும், இதில் உள்ள பாலிபீனால்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் துணைபுரிகின்றன.
ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் என்பதும் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்பிளை தோலுடன் சாப்பிடும்போது கூடுதல் நார்ச்சத்துகள் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி உடலில் உள்ள செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
அதேபோல், பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்க துணைபுரிகிறது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களிடம் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரஞ்சு பழத்தை சாறாக குடிப்பதைவிட முழுப் பழமாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, முழுப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் கூடுதல் நார்ச்சத்துகளைப் பெற முடியும்.
புளூபெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய மூன்று பழங்களிலும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு நன்மை தரும் சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றை காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதுடன், சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்றுவது நீண்டகால ஆரோக்கியத்துக்கு உதவும்.