டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் 
ஆரோக்கியம்

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்.. பாதுகாத்துக்கொள்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் பகல் நேரத்திலும் கடிக்கும் என்பதால், பகலில் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்வது முக்கியம்.

தமிழகத்தில் டெங்கு, டைபாய்ட் மற்றும் உண்ணி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்குவால் இந்த ஆண்டில் இதுவரை 4,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் வேகமாகப் பரவுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்குவதற்காகச் பிரத்தியேக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வீடுகளிலேயே தங்கி ஓய்வெடுக்கும் நிலையிலேயே உள்ளனர். 5 முதல் 10 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே தீவிர மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனினும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து டெங்கு பரவாமல் தடுக்க வேண்டியது அவசியம்.

அலட்சியம் வேண்டாம்

உங்கள் தெருவிலோ, பக்கத்து வீட்டிலோ ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தால் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில் டெங்கு காய்ச்சல் பொதுவாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவாது. அதேசமயம் டெங்குவால் பாதிக்கப்பட்டவரைக் கடித்த ஏடிஸ் ஏஜிப்டி கொசு மற்றொருவரைக் கடிக்கும்போது தொற்று பரவும் என்பதால் அலட்சியமாக இருக்கக்கூடாது.

சுற்றுப்புறத்தில் டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தால் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம்.

பகல் நேரத்திலும் கவனம் தேவை

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் பகல் நேரத்திலும் கடிக்கும். எனவே பகல் முழுவதும் கொசுக்கடியிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்வது முக்கியம். முடிந்தவரை கை, கால்களை மூடும் ஆடைகளை அணியலாம். தேவையானபோது பாதுகாப்பான கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தலாம். வீட்டின் கதவு, ஜன்னல்களில் கொசுவலை இருந்தால் சேதமில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டிற்குள் கொசுக்கள் அதிகமாக இருந்தால் கொசுவிரட்டி திரவ சாதனங்களை பயன்படுத்தலாம். மின்விசிறியை இயக்கி வைப்பதும் கொசுக்கள் அருகில் வந்து அமர்வதை ஓரளவு குறைக்க உதவும்.

டெங்கு பரவும் முறை

குறிப்பாக டெங்கு பாதிக்கப்பட்ட நபரும் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அவரை கடித்த அதே கொசு மற்றவர்களைக் கடிப்பதன் மூலம் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால், கொசுவலை மற்றும் கொசுவிரட்டி போன்ற பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது முக்கியம்.

அக்கம் பக்கத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது போதாது. தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேங்கிய தண்ணீரை அகற்றி, கொசுக்கள் பெருகுவதற்கான வாய்ப்பைக் குறைத்தால்தான் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

SCROLL FOR NEXT