வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ நீங்கள் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா?.
உலக அளவில் லட்சக்கணக்கான பேர் தலைவலியை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மருந்து, மாத்திரைகள் நிவாரணம் தரும் என்றாலும், அடிக்கடி வார இறுதி நாட்களை தலைவலி அபரித்துக்கொண்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். என்னென்ன காரணங்களால் வார இறுதி நாட்களில் தலைவலி வருகிறது என்பது குறித்து பார்ப்போம்.
* மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில்தான் இணையதளங்களில் அதிகமான நேரத்தை நிறைய பேர் செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் விடுமுறை நாட்களில் இருந்த இடத்தை விட்டு நகராமல் மணிக்கணக்கில் திரைப்படங்கள், வெப் சீரியல்கள், டி.வி.க்கள், வீடியோ கேம்கள், சாட்டிங் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ திரை வடிவில் காட்சிகளை பார்த்துக்கொண்டிருப்பது தலைவலி பிரச்சினையை ஏற்படுத்தும். மேலும் ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துவது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
* வார நாட்கள் முழுவதும் ஓய்வின்றி வேலை பார்ப்பவர்களுக்கு விடுமுறை நாள் மிகவும் முக்கியமானது. முந்தைய நாள் மாலையே விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க உடலும், மனமும் தயாராகிவிடுகிறது. நாளை விடுமுறை தானே என்ற எண்ணத்தில் நிறைய பேர் இரவில் தாமதமாக தூங்க செல்கிறார்கள். திரைப்படம் பார்ப்பது, சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிடுவது, வெப் சீரியல்கள் பார்ப்பது, பிடித்தமானவர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசுவது என தூக்கத்திற்கு தடை போட்டுவிடுகிறார்கள். தாமதமாக தூங்க செல்வதால் வழக்கமாக காலையில் விழிக்கும் நேரத்தை விட 2, 3 மணி நேரம் தாமதமாக எழுந்திருக்கிறார்கள். இப்படி அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றங்களை செய்வது உடல் நலத்துக்கு நல்லதல்ல. அது அடுத்த நாள் தலைவலி உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
* அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் வார நாட்களில் பணிக்கு மத்தியில் அதிகம் சாப்பிடுவதில்லை. ஆனால் அதிகமாக தண்ணீர் பருகுவார்கள். ஆனால் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாளிலும் அதிகமாக சாப்பிடுவார்கள். அதேவேளையில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. ஆனால் அலுவலகத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பார்கள். வார இறுதி நாட்களில் உடலில் நீர்ச்சத்து குறைந்து போவது ஒற்றை தலைவலி மற்றும் தலைவலிக்கு முக்கிய காரணமாகும். எனவே விடுமுறை நாட்களில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
* வார இறுதி நாட்களில் காபி, டீ, சோடா, குளிர்பானங்கள், ஆல்ஹகால் போன்றவற்றை மற்ற நாட்களை விட அதிகமாக நிறைய பேர் பருகுகிறார்கள். காபி, டீயை அதிகம் பருகும்போது அதில் உள்ள காபின் காரணமாக தலைவலி உண்டாகலாம். குறிப்பாக மது அருந்துபவர்களுக்கு தலைவலி பிரச்சினை அதிகமாக தலைதூக்கும்.
* விடுமுறை நாட்களில் நிறைய பேர் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அது தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். அதுவும் தலைவலி ஏற்பட காரணமாகிவிடும்.