பச்சை, கருப்பு, சிவப்பு திராட்சை 
ஆரோக்யம்

திராட்சையில் எந்த ரகம் மிகவும் ஆரோக்கியமானது?

பொதுவாக பழ சாலட்கள், ஜாம்கள் தயாரிப்பிலும், ஒயின் தயாரிப்பிலும் சிவப்பு திராட்சை பயன்படுத்தப்படுகிறது.

பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் பழங்களில் திராட்சையும் ஒன்று. கருப்பு, பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கக்கூடிய இந்த பழங்கள் கோடை காலத்தில் அதிக அளவு கிடைக்கும். இவை உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சியைத் தருவதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

உடலில் சக்தி குறைந்து சோர்வாக இருக்கும்போது, திராட்சை பழங்களைச் சாப்பிட்டால் உடனடியாகத் தெம்பு கிடைக்கும்.

பச்சை, கருப்பு, சிவப்பு ஆகிய திராட்சை வகைகளில் எது அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பதை தெரிந்து கொள்வோம்.

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. பச்சை திராட்சை

இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டது. இதில் வைட்டமின்கள் சி, கே மற்றும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்துள்ளன. பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகமாக உள்ளன. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவிடும். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கையான கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.

வைட்டமின் சி நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைட்டமின் கே, எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், இதய ஆரோக்கியத்தை காப்பதற்கும் உதவிடும். உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் பச்சை திராட்சை துணைபுரியும்.

கருப்பு திராட்சை

2. கருப்பு திராட்சை

அடர் கருப்பு நிறத்துடன் கூடிய இனிப்பு மற்றும் சாறு நிறைந்த திராட்சை வகை இது. இதில் இருக்கும் அதிக டானின் சத்து, ஒயினுக்கு தனித்துவமான சுவையை அளிப்பதால், இந்த திராட்சை ஒயின் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன. பச்சை திராட்சையை போலவே, கருப்பு திராட்சையும் வைட்டமின்கள் சி, கே ஆகியவற்றை அதிகம் கொண்டிருப்பதால் இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானதாகும்.

இதில் ரெஸ்வெராட்ரோல் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்டும் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு, வீக்கத்தை குறைத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் சில வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாத்தல் உள்பட பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கும்.

3. சிவப்பு திராட்சை

கிரிம்சன் அல்லது பர்கண்டி திராட்சை என்று அழைக்கப்படும் சிவப்பு திராட்சை, இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்டது. பொதுவாக பழ சாலட்கள், ஜாம்கள் தயாரிப்பிலும், ஒயின் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

கருப்பு திராட்சையை போலவே, சிவப்பு திராட்சையிலும் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ரெஸ்வெராட்ரோல் நிறைந்துள்ளன.

மூன்றில் சிறந்தது எது?

மூன்று வகை திராட்சைகளும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கினாலும், கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது பச்சை திராட்சையில் அந்த அளவுக்கு இருக்காது. அத்துடன் பீனாலிக் அமிலம், பிளாவனாய்டு போன்றவையும் உள்ளன. எனவே, கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகள், பச்சை திராட்சையை விட சற்று அதிகமான உடல்நல நன்மைகளை வழங்கக் கூடியவை.

இனிப்புத்தன்மையையும், அதிக ஆன்டிஆக்சிடென்ட் சத்தையும் விரும்புபவர்கள் கருப்பு திராட்சையை உட்கொள்ளலாம். கலோரி உட்கொள்வதை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்கள், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள் பச்சை திராட்சையை தேர்ந்தெடுக்கலாம்.