ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் 
ஆரோக்யம்

ரத்த ஓட்டம் மோசமானால் ஏற்படும் பாதிப்புகள்

ரத்த ஓட்டம் குறைந்தால் கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம் உண்டாதல், உடல் பலவீனமடைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டாலோ, ரத்த ஓட்டம் குறைந்தாலோ உடல் சக்தியை உறிஞ்சி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மோசமான ரத்த ஓட்டம் என்றால் என்ன?

உடல் உள் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லும் செயலே ரத்த ஓட்டமாகும். ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல் இருப்பதே மோசமான ரத்த ஓட்டமாக மதிப்பிடப்படுகிறது.

மோசமான ரத்த ஓட்டம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

மாரடைப்பு, பக்கவாதம், மூளை செயலிழப்பு / மூளை சிதைவு, ரத்த உறைவு, ரத்தத்தில் கட்டி உண்டாதல்,

நீண்டகால சோர்வு, மிக மோசமான நிலையில் உடல் திசுக்கள் சேதமடைதல்/மரணம்

பொதுவான அறிகுறிகள்

* கைகள் அல்லது கால்களின் முனைப்பகுதி குளிராக இருக்கும்.

* கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம் உண்டாகும்.

* உடற்பயிற்சி செய்யும்போது உடல் பலவீனமடையும்.

* கைகள், கால்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அல்லது உணர்வு இழப்பு ஏற்படும்.

* தாம்பத்திய குறைபாடு ஏற்படும்.

எதனால் ரத்த ஓட்டம் குறைகிறது?

* அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது

* ரத்தத்தில் சர்க்கரை அதிகம் சேர்வது

* உடலில் நீர் குறைவாக இருப்பது, அதாவது நீரிழப்பு உண்டாவது

* தசைகள் இறுக்கமாக இருப்பது

* நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறைவது

* புகைப்பிடிப்பது அல்லது நீண்டகால மன அழுத்தத்தால் அவதிப்படுவது.

ரத்த ஓட்டம் சீராக என்ன சாப்பிடலாம்?

* முறையான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் இயற்கையாகவே ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

* அவகோடா - இதயத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டது.

* அடர் சாக்லெட் - ரத்த நாள செயல்பாட்டை மேம்படுத்தும்.

* பெர்ரி பழங்கள்- தமனிகளை வலுவாக வைத்திருக்க உதவும்.

* பூண்டு - ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* சிட்ரஸ் பழங்கள் - இதிலிருக்கும் வைட்டமின் சி ரத்த நாளங்களை பலப்படுத்தும்.

* கிரீன் டீ - வாஸ்குலர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* மீன் - அதிலிருக்கும் ஒமேகா 3 இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

* கீரைகள்- ரத்த நாளங்களை விரிவுபடுத்தும்.