AI Image 
ஆரோக்கியம்

உணவு இடைவேளை நேரத்தில் ஏற்படும் பசிக்கு... ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்..!

இடைவேளை நேரத்தில் பசி ஏற்படும்போது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையிலோ அல்லது மாலை நேரத்திலோ திடீரென பசி ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்த நேரத்தில் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது. இத்தகைய உணவுகளை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்த்து, உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

வீட்டுச் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சத்தான சிற்றுண்டிகளைத் தயாரிக்க முடியும். இவை திடீர் பசியைத் தணிப்பதுடன், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகளையும் வழங்குகின்றன. அத்தகைய சில ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றிப் பார்ப்போம்.

வறுத்த கொண்டைக்கடலை

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வறுத்த கொண்டைக்கடலை சிறந்த சிற்றுண்டித் தேர்வாகும். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான தாவரப் புரதம் மற்றும் இரும்புச்சத்தும் இதில் கிடைக்கின்றன. மாலை நேரத்தில் தேநீருடன் வறுத்த கொண்டைக்கடலையைச் சாப்பிடலாம்.

AI Image

வறுத்த மக்கானா

தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் மக்கானாவைச் சிறிதளவு நெய் அல்லது எண்ணெயில் வறுத்து, மிளகு, சீரகத்தூள், மஞ்சள்தூள் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். அதிக எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பாகத் தயாரிக்க முடிவதால், மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஏற்றதாக இருக்கும். இதில் புரதம் மற்றும் சில தாதுச்சத்துகள் உள்ளன.

முளைகட்டிய பயறு சாலட்

பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கலாம். சிறிதளவு எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்தால் சுவையான 'ஸ்பிரவுட்ஸ் சாட்' தயார். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கின்றன. காய்கறிகளையும் சேர்த்துச் சாப்பிடுவதால் கூடுதல் ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

AI Image

பழங்கள்

இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும்போது, செயற்கை இனிப்புகள் கலந்த உணவுகளைத் தவிர்த்து இயற்கையான பழங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம் போன்ற பழங்களைச் சிறிய அளவில் சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் செரிமானத்துக்கு உதவுவதுடன், பசியைக் கட்டுப்படுத்தவும் துணைபுரிகின்றன.

AI Image

காய்கறிகள் கலந்த அவல்

அவல் எளிதில் தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாகும். அவலை ஊறவைத்து, அதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்து லேசாக வதக்கலாம். சிறிதளவு வேர்க்கடலை சேர்ப்பதன் மூலம் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளையும் பெறலாம். சுவையாக இருப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் அளிக்கும். அதிக எண்ணெய் சேர்க்காமல் தயாரிப்பது நல்லது.

வேகவைத்த சோளம்

மாலை நேரப் பசிக்கு வேகவைத்த சோளம் சிறந்த தேர்வாகும். இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சில வைட்டமின்கள் உள்ளன. சோளத்தை வேகவைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். அதிக வெண்ணெய், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

AI Image

வேர்க்கடலை

புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த வேர்க்கடலை பசியைத் தணிக்க உதவும். வறுத்த வேர்க்கடலையைச் சிறிய அளவில் சாப்பிடலாம். விருப்பமிருந்தால் அதனுடன் பொட்டுக்கடலை அல்லது சிறிதளவு வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். இருப்பினும், இதில் கலோரிகள் அதிகம் என்பதால் அளவோடு உட்கொள்வது அவசியம்.

சிற்றுண்டியைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம்!

இடைவேளை நேரத்தில் பசி ஏற்படும்போது உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிடாமல், தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். அதிக சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அன்றாட உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திடீர் பசியைச் சமாளிப்பதுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

SCROLL FOR NEXT