குதிகால் வாதம் குணமாக சித்த வைத்தியம் 
ஆரோக்யம்

குதிகால் வாத நோய்க்கு சித்த மருத்துவம்

நடக்கும்போது குத்துதல் போன்ற வலி, காலையில் எழுந்து நடக்கும்போது வலி அதிகமாதல் போன்ற பாதிப்புகளை குதிகால் வாதம் ஏற்படுத்தும்.

"பிளான்டர் ஃபேசைடிஸ்" என்பது குதிகால் வாதம் என்னும் பிரச்சினை ஆகும். பேசியா என்பது லத்தின் மொழியில் பேன்டேஜ் அல்லது ரிப்பன் என்று அழைக்கப்படும். இவை உடலின் பகுதிகளை ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக கட்டும் நார் போன்ற இணைப்பு திசு ஆகும். இது கால் பாதத்தின் அடியில் உள்ள தடிமனான ரப்பர் பேண்ட் போன்ற இணைப்பு திசு ஆகும். இது குதிகால் எலும்பை கால் விரல்களின் அடிப்பகுதியுடன் இணைக்கிறது. நடக்கும்போது, குதிக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை இது தாங்குகிறது.

இந்த கால் பாத தசை நார் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் அழற்சியே "பிளான்டர் பேசியா" எனப்படுகிறது. இவ்வகை குதிகால் வாதமானது, நடக்கும்போது குத்துதல் போன்ற வலி, காலையில் எழுந்து நடக்கும்போது வலி அதிகமாதல், நெடுநேரம் நிற்கும்போது வலி கடுமையாதல், வீக்கம், உளைச்சல் இவைகளை ஏற்படுத்தும் வாத நோய் ஆகும்.

சித்த மருத்துவம்:

கீழ்க்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது சிறந்தது.

1.அயவீரச்செந்தூரம் -100 மிகி, ஆறுமுகச் செந்தூரம் -100 மிகி, முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி, குங்கிலிய பற்பம் -200 மிகி இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

2.இந்நோயில் ஏற்படும் அழற்சிக்கு இடிவல்லாதி மெழுகு -500 மிகி இருவேளை அல்லது சேராங்கொட்டை நெய் -2.5 மிலி இருவேளை சாப்பிட வேண்டும்.

3. வலியுள்ள பகுதியில் பூச மயனத் தைலம் சிறந்தது.

4. இந்நோய் உள்ளவர்கள் கால் பாதத்தில் பந்து அல்லது உருளையான ஒன்றை வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும், இது "பிளான்டர் பேசியா"அழற்சியை குறைக்கிறது.

- டாக்டர் ஒய்.ஆர்.மானெக்சா, சித்த மருத்துவ நிபுணர்.