மழைக்கால நோய்களும் பாதுகாப்பு முறைகளும் 
ஆரோக்கியம்

மழைக்கால நோய்களும் பாதுகாப்பு முறைகளும்

மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.

மழைக்காலம் என்றாலே மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய அற்புதமான பருவகாலம் ஆகும். வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, குளிர்ந்த காற்று தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும். உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும் உற்சாக காலம். காய்ந்து கிடந்த பூமி குளிர்ச்சியடைந்து, மரங்களும் செடிகளும் பசுமையாக மாறி பார்ப்பதற்கு கண்களுக்கு விருந்தாக அமையும். ஏரிகள், குளங்கள் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும்.

மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்கள்

அதேசமயம், மழைக்காலம் மனிதர்களுக்கு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். மழைக்காலம் கொசுக்களின் இனப்பெருக்க காலம். மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நோய்களை உருவாக்கும் ஏராளமான கொசுக்கள் விரைவாக முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த கொசுக்களால் மழைக்காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன. சுகாதாரமற்ற தண்ணீர், சுகாதாரமற்ற முறையில் உண்ணும் உணவுகள் மூலம் டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாலும், இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

மழைக்கால நோய்களும் பாதுகாப்பு முறைகளும்

அலட்சியம் வேண்டாம்

மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொண்டைவலி, குரல் கம்மல் இவைகளுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும். மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களும் அதிக சிரமப்படுகிறார்கள்.

இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதுடன், போதிய ஓய்வும் அவசியம். அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இதுதவிர சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

நோய் தடுப்பு முறைகள்

மழைநீரில் நனைந்தால் அல்லது குளித்தால் தலையை ஈரம் நீங்க நன்றாக துடைக்க வேண்டும். மழைக்காலத்தில் பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது. தண்ணீர் ஒத்துக்கொள்ளாதவர்கள், கொதிக்க வைத்து சற்று ஆறவைத்த வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவைகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுத்தொல்லையில் இருந்து விடுபட, வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலைகள் பயன்படுத்துவது நல்லது.

SCROLL FOR NEXT