நாக்கின் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் காணப்படும் சிறிய, சிறப்பான அமைப்புகள் 'லிங்குவல் பாப்பிலே' (lingual papillae) என அழைக்கப்படுகின்றன. இவை நாக்கிற்கு சொரசொரப்பான தன்மையை அளிப்பதோடு, தொடுதல், வெப்பநிலை மற்றும் சுவை ஆகியவற்றை உணர உதவுகின்றன. இந்த அமைப்பினுள் சுவை மொட்டுகள் அமைந்துள்ளன. இந்த சுவை மொட்டுகள் இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை உணர உதவுகின்றன. ஒவ்வொரு சுவை மொட்டிலும் சுமார் 50 முதல் 150 சுவை உணர்வு செல்கள் (சுவை ஏற்பி செல்கள்) உள்ளன.
நாம் உண்ணும் உணவில் உள்ள வேதியியல் மூலக்கூறுகள் உமிழ்நீரில் கரைந்து, சுவை மொட்டின் நுனியில் உள்ள சுவைத் துளை மற்றும் நுண்ணிய மைக்ரோவில்லி (Microvilli) வழியாக சுவை ஏற்பி செல்களை அடைகின்றன. செல்கள் அவற்றை சமிக்ஞைகளாக மாற்றி நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகின்றன. இதன்மூலம் நாம் சுவையை உணர்கிறோம்.
சுவை மொட்டுகளில் உள்ள சுவை உணர்வு செல்கள் மிக விரைவாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த செல்களில் பெரும்பாலானவை 10 முதல் 14 நாட்களில் புதிதாக மாறுகின்றன. இதனால் சுவை உணரும் அமைப்பு காலப்போக்கில் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.
இவ்வாறு சுவை உணர்வு செல்கள் புதுப்பிக்கப்படுவதால் நமது உணவு பழக்கங்களை மாற்றினால் சுவை உணரும் விதத்திலும் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழக்கூடும். ஆம், தினமும் அதிக உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த சுவைகள் பழக்கமாகிவிடலாம். அதேநேரத்தில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிடத் தொடங்கினால் சுவை உணரும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படலாம்.
உதாரணமாக, இதற்கு முன்பு அதிக உப்பாக தோன்றாத உணவுகள், சில வாரங்களுக்கு பிறகு அதிக உப்பாக தோன்றலாம். பழங்களின் இயற்கையான இனிப்புச்சுவை அதிகமாக தெரியலாம். கீரை மற்றும் சில காய்கறிகளின் கசப்புச் சுவையை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் உருவாகலாம்.
அனைவருக்கும் இரண்டு வாரங்களில் சுவை உணரும் திறன் மாறிவிடும் என்று கூற முடியாது. உணவுப் பழக்கங்கள், மரபியல் காரணங்கள், வயது, சுற்றுச்சூழல் மற்றும் உடல்நிலை போன்ற பல காரணிகள் சுவை உணர்வை பாதிக்கின்றன.
உப்பு, சர்க்கரை மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இயற்கையான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் காலப்போக்கில் நாக்கு தானாகவே ஆரோக்கியமான உணவுகளின் சுவைக்கும், இயற்கையான சுவைக்கும் பழகிவிடும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாம் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கும் மாறலாம்.