கோலார் தங்கவயல்:
ஏரியில் மூழ்கி பலி
கோலார் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டகுண்டலு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயியான இவருக்கு ராமு(வயது 14), லட்சுமண்(12) என 2 மகன்கள் இருந்தனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜூ என்பவரின் மகன் பிரஜ்வல்(14). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்பினார்கள்.
மாலையில் கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் 3 சிறுவர்களும் குளிக்கச் சென்றனர். அப்போது ராமு மற்றும் லட்சுமண் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அதைப்பார்த்த பிரஜ்வல் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளான். ஆனால் அது முடியாமல் போனது. முடிவில் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
சோகம்
இதற்கிடையே சிறுவர்கள் 3 பேரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறுவர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று 3 சிறுவர்களின் உடல்களும் கரை ஏரியில் மிதந்தது. அதுபற்றி அறிந்த அவர்களது பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களது மகன்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிந்தாமணி புறநகர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், கிராம மக்களின் உதவியுடன் 3 சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.