கடலூர்,
ஞான சபையில் ஆண்டுதோறும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், வடலூர் தர்ம சாலை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது உருவப்படத்தை வண்ண மலர்களால் அலங்காிக்கப்பட்ட சிறிய பல்லக்கில் வைத்தனர். பின்னர் மேள, தாளம் இசைக்க பார்வதிபுரம் கிராம மக்கள் அந்த பல்லக்கை ஊர்வலமாக சுமந்தபடி வடலூரில் உள்ள சத்தியஞான சபைக்கு காலை 10 மணிக்கு வந்தனர். அவர்களை சபையின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து பல்லக்கில் இருந்த பொருட்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து கிராமமக்கள் பல்லக்கை அங்கிருந்து சுமந்தபடி சீர் வரிசை பொருட்களுடன் கொடிமரத்தின் அருகில் வந்தனர். அப்போது ஜோதி கொடியே, ஆனந்த சொரூபக் கொடியே, ஜோதியுருப்பாதிக்கொடியே, ஜோதி வலப்பாகக்கொடியே என்ற கொடிப்பாட்டை சன்மார்க்க அன்பர்கள் பாட, சத்தியஞானசபையில் மஞ்சள் வெண்மை நிறத்துடன் கூடிய இரு வண்ண கொடியேற்றப்பட்டது.
இதில் திரளான பொதுமக்கள், சன்மார்க்க அன்பா்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தருமசாலை மேடையில் பகல் 1 மணிக்கு திருஅருட்பா இசை நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தாிசனம் சத்திய ஞானசபையில் இன்று நடைப்பெற்றது. காலை 6 மணிக்கு திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணி என மொத்தம் 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதிதரிசனம் காண்பிக்கப்படுகிறது. இதை காண கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பஸ், ரெயில், கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து வடலூரில் குவிந்தனர்.