செய்திகள்

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவை குளங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம் அதிகாரிகள் தகவல்

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள குளங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளதாக மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற அதிகாரிகள் தெரிவித்தார்.

கோவை,

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நட்டும், உறுதிமொழி எடுத்தும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள குளங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற அதிகாரிகள் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் நோக்கமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் ஏற்படுத்தி அவர்கள் பங்களிப்புடன், வளமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியர்களுக்கு விட்டுச் செல்வதாகும்.

ஆயிரம் மரக்கன்றுகள்

மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகளை நட்டு அதை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு உருவாகும் என்பதால் தான் ஆண்டுதோறும் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரமாட்டார்கள். எனவே அதன்படி முதன்மை கல்வி அதிகாரி உஷா அறிவுரையின்படி இந்த ஆண்டு பள்ளிகளில் நடாமல் கோவையில் உள்ள குளங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த மரக்கன்றுகள் தற்போது ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.