செய்திகள்

நின்ற லாரி மீது கார் மோதியது: ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி

சமயபுரம் அருகே நின்ற லாரி மீது கார் மோதியதில் 8 பேர் பலியானார்கள். விபத்து நடந்தது எப்படி? என்ற தகவல்கள் கிடைத்து உள்ளன.

சமயபுரம்,

சென்னை மேடவாக்கம் ஜல்லடையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது67). இவரது மகன்கள் பாலமுருகன் (46), விஜயராகவன் (43), மகள் பாக்கியலட்சுமி. 2 மகன்களுடன் சேர்ந்து சுப்பிரமணியன் சென்னையில் வெல்டிங் பட்டறை மற்றும் கிரில் கேட் தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தார். மகன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த பின்பும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சுப்பிரமணியனின் மனைவி ஜெயலட்சுமி (63)யின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஆகும்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெருகமணி சக்தி நகரில் சுப்பிரமணியன் குடும்பத்தினர் புதிய வீடு ஒன்றை வாங்கினர். இந்த வீட்டிற்கு அவ்வப்போது விடுமுறை தினத்தில் சுப்பிரமணியன் தனது மனைவி, மகன்கள், மகள் குடும்பத்தினருடன் காரில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சுப்பிரமணியன் குடும்பத்தினர் 13 பேர் ஒரு காரில் திருச்சி மாவட்டம் பெருகமணிக்கு புறப்பட்டனர். காரை மூத்த மகன் பாலமுருகன் ஓட்டி வந்தார். கார் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடிக்கு முன்பாக வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்தவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி அய்யோ.. அம்மா... என அபய குரல் எழுப்பினர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வேன், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேன்களில் அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த 8 பேர்களின் விவரம் வருமாறு:-

1) சுப்பிரமணியன், 2) அவரது மனைவி ஜெயலட்சுமி, 3) மூத்த மகன் பாலமுருகன், 4) இளைய மகன் விஜயராகவன், 5) விஜயராகவன் மனைவி கோமதி (33), 6) சுப்பிரமணியனின் மருமகன் மஞ்சுநாதன்(45), 7) பாலமுருகனின் மகன் கந்தசாமி (11), 8) மஞ்சுநாதனின் மகள் நிவேதா (12).

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:- 1) கவிதா (38) கணவர் பெயர் பாலமுருகன். 2) பாக்கியலட்சுமி (37) கணவர் பெயர் மஞ்சுநாதன். 3) ரம்யா (5) தந்தை பெயர் மஞ்சுநாதன். 4) இறந்த விஜயராகவனின் மகள்கள் கந்தலட்சுமி (12), 5) ஜெயஸ்ரீ (3).

படுகாயமடைந்த 5 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்துக்குள்ளான காரை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். மோதிய வேகத்தில் லாரியின் பின்புறத்தில் கார் சொருகிக்கொண்டது. இதையடுத்து காரை கிரேன் மூலம் மீட்டனர்.

சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருச்சியில் உள்ள தனியார் இரும்பு கம்பி நிறுவனத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி என தெரியவந்தது. இதற்கிடையில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு வைக்கப்பட்டு இருந்த இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததால் நேற்று அதிகாலை அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் தப்பி ஓடிய லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் ஹாளகஸ்தியை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரை சமயபுரம் போலீசார் நேற்று பிற்பகலில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.