செய்திகள்

சிமெண்டு ஆலைகளின் கனரக வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

சிமெண்டு ஆலைகளின் கனரக வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-

அனைத்து சிமெண்டு ஆலைகளில் இருந்து இயங்கும் கனரக வாகனங்களில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதிவேகமாகவும், அதிகம் பாரங்களை ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிபோதையிலோ, செல்போன் பேசிக்கொண்டோ வாகனங்களை இயக்கக்கூடாது. சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் லாரிகளில் கட்டாயம் தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன் (அரியலூர்), ஆனந்தி (ஜெயங்கொண்டம்), மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் சரவணபவன், சிமெண்டு தொழிற்சாலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்உள்பட போக்குவரத்து அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.