மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது

டாஸ்மாக் மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை சொக்கம்புதூர் ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சந்துரு (வயது 29). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கோவை தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை பாரில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து சந்துருவின் நெஞ்சில் கத்தியால் குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்துருவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்துருவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (28), வினோத் (29) என்பதும், அவர்கள் சந்துருவின் நண்பர்கள் என்பதும், அவர்கள் மீது கோவை மாநகர போலீசில் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து பிரதீப், வினோத் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரதீப், வினோத் ஆகியோர் சந்துரு வின் நண்பர்கள். கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது அருந்தினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வினோத் கத்தியால் சந்துருவை குத்தினார். பிரதீப், பீர் பாட்டிலை உடைத்து சந்துருவின் இடுப்பு பகுதி யில் குத்தி உள்ளார். இதில் சந்துரு பரிதாபமாக இறந்தார் என்றனர்.