தூத்துக்குடியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கே.வி.கே. சாமிநகர் அருகே உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடமிருந்த சாக்குப்பையில் 5 கிலோ கஞ்சா இருப்பதும், அதனை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை மேலூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (வயது 33), தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 2-வது தெரு பட்டுராஜா(21), குறிஞ்சிநகர் 7-வது தெரு சின்னமணி(48) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பரமசிவன் மீது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.