மாவட்ட செய்திகள்

மண்ணடி பகுதியில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது

மண்ணடி பகுதியில் வீடு புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரம் உள்ள புதரில் பதுக்கிய 50 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராயபுரம்,

சென்னை மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்தவர் உம்முல் அபிபா (வயது 42). இவர், கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 65 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது 22), பாலு (21), ஆகாஷ் (20), அஜித் என்ற லெப்ட் அஜித் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கைதான 4 பேரும், குப்பை பொறுக்கும் நபர்கள் என்பதும், சாலையோரம் வசித்து வரும் இவர்கள், சம்பவத்தன்று உம்முல்அபிபா வீட்டின் சாவியை ஜன்னல் பக்கத்தில் வைத்து இருப்பதை கண்டு, அந்த சாவியை எடுத்து நைசாக வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து நகையை திருடியது தெரிந்தது.

கைதான லாரன்ஸ் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் உள்ள முட்புதரில் பதுக்கி வைத்து இருந்த 50 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT