மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படம் பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர், இரும்பு தடுப்பில் மோதி பலி

குமரியில் இருந்து நெல்லைக்கு ‘பீஸ்ட்’ படம் பார்க்க வந்த போது இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பா படுகாயம் அடைந்தார்.

நெல்லை:

குமரியில் இருந்து நெல்லைக்கு பீஸ்ட் படம் பார்க்க வந்த போது இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பா படுகாயம் அடைந்தார்.

படம் பார்க்க வந்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் மகன் ஜெனிஸ் ரோஜன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது நண்பர் வல்லிடையான்விளை பகுதியை சேர்ந்த ராஜன் (24) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டருக்கு பீஸ்ட் படம் பார்க்க வந்தார். மோட்டார் சைக்கிளை ஜெனிஸ் ரோஜன் ஓட்டினார். பின்னால் ராஜன் அமர்ந்து இருந்தார்.

வாலிபர் சாவு

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் விலக்கு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெனிஸ் ரோஜன் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிதாபம்

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குமரியில் இருந்து நெல்லைக்கு பீஸ்ட் படம் பார்க்க வந்த போது இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.