மதுரை,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக் கட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது51). தொழில் அதிபரான இவர், தன்னுடைய நிறுவனத்துக்குத் தேவையான 3 எந்திரங்களை வாங்க முடிவு செய்து, விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையை தொடர்பு கொண்டார். மேலும், வங்கியில் இருந்து கடன் பெற்று ரூ.43 லட்சத்து 30 ஆயிரத்தை தொழிற் சாலைக்கு வழங்கி உள்ளார். இதற்கிடையே, 3 எந்திரங்களுக்கு பதிலாக 2 எந்திரங்களை வாடிப்பட்டிக்கு அனுப்பி வைத்த தொழிற்சாலை நிர்வாகிகள், 5 மாதங்கள் கழித்தே அந்த 2 எந்திரங்களையும் பொருத்தி தந்துள்ளனர். சோதனை ஓட்டத்தின்போது பல பாகங்கள் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து 2 எந்திரங்களையும் தொழிற்சாலைக்கு எடுத்துச்சென்று பொருத்தி தருவதாக அவர்கள் கூறி காலம் தாழ்த்தி உள்ளனர். இதுகுறித்து, மோகன்தாஸ் வாடிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்போது எந்திரங்களை பழுது பார்த்து தருவதாக உறுதி அளித்த நிர்வாகிகள் மீண்டும் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுதொடர்பாக கேட்ட மோகன் தாஸ் மீது ராஜபாளையம் போலீசில் கொலை மிரட்டல் புகாரும் அளித்துள்ளனர். இந்த புகாரை விசாரித்த போலீசார், தொழிற்சாலை மீது தவறு இருப்பதை அறிந்து அவர்களை எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, மோகன்தாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீ சார் விசாரணை நடத்தியபோது, எந்திரங்களை திரும்ப எடுத்துக்கொண்டு பணத்தை தந்து விடுவதாக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் பணத்தையும் தராமல் மீண்டும் அலைக்கழித்துள்ளனர். இதனை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் வெங்கட்ராமன் (57), அவரது மகன் கண்ணன் என்ற சிங்கராஜ் (32) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.