திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்கிட வேண்டும். கொத்தடிமையாக தொழிலாளர்களை பயன்படுத்துவது கண்டறிந்தால் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் வரை அபராதமாக விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது.
அனைத்து நிறுவன உரிமையாளர்களும் அரசு நிர்ணயித்துள்ள சம்பளத்திற்கு குறைவாக வழங்குவது கண்டறியப்பட்டால் தொழிலாளர் நலத்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ரோஸ்லின்ராஜன் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் மற்றும் மனித வணிகம் தொடர்பாக விளக்கி பேசினார்.
இதில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்கொடி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர்(பொறுப்பு) இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.