மாவட்ட செய்திகள்

வேப்பனப்பள்ளியில், குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கொல்லப்பள்ளி கிராமம். இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் ஒரு ஆண்டாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடிநீர் பிரச்சினையால் விவசாய நிலத்தில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். தற்போது விவசாய நிலத்திலும் போதிய தண்ணீர் இல்லாததால் அவதிக்குள்ளான கொல்லப்பள்ளி கிராம மக்கள் நேற்று காலை வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை இது தொடர்பாக மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நீண்ட நேரமாக முற்றுகையிட்டிருந்த பொதுமக்கள் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

SCROLL FOR NEXT