மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற தந்தை- மகன் கைது

கோவை கிராஸ்கட் ரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற தந்தை- மகன் கைது மேலும், அவர்கள் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.

கோவை,

கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் வளாகத்துக்குள் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கடந்த மாதம் 29-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்துவிட்டு, கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்தது. இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் சோமசேகர் ஆகியோரின் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் இருளப்பன், மரியதாஸ், தனசேகரன், யூசுப், ஏட்டு ஆல்பர்ட் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.

கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கிராஸ்கட் ரோட்டில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். அப்போது கொள்ளையில் தொடர்புடைய ஆசாமிகள் ஒரு ஓட்டலில் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து வேலை கேட்டதும், பின்னர் வருவதாக கூறிவிட்டு சென்ற அவர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.கிராஸ்கட் ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதிலும் இந்த ஆசாமிகளுக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து உக்கடம் பகுதியில் போலீசார் கண்காணித்தனர். அப்போது திருட்டு மோட்டார் சைக்கிளை உக்கடம் பகுதியில் விற்க முயன்றபோது போலீசார் 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.

போலீஸ் விசாரணையில், பிடிபட்டவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பாரதி நகரை சேர்ந்த பெருமாள் (வயது 57), அவருடைய மகன் தஷ்மந்த் ஜனித்தன் (23) என்றும் தெரியவந்தது. இவர்கள் மீது நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

கடன் தொல்லை காரணமாக புத்தேரியில் இருந்து கோவை வந்து தங்கி இருந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாக போலீசில் அவர்கள் தெரிவித்தனர். கிராஸ்கட் ரோடு பகுதியில் அவர்கள் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். மோட்டார் சைக்கிளை பூட்டாமல் சாவியுடன் வைத்து இருக்கும் மோட்டார் சைக்கிளை பார்த்து இவர்கள் திருடி வந்ததாகவும் போலீசில் வாக்கு மூலம் அளித்தனர்.

இதுகுறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகன் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT