தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளும் சேரலாம்.
தற்போது 2019-20-ம் கல்வியாண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.
விண்ணப்பம்
விடுதியில் சேர, மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.