மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தர்மபுரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அனைத்து வங்கிகளிலும் வங்கி பணிகள் பாதிப்படைந்தது. பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 270 வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வங்கியில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 2 நாட்களும் மொத்தம் 1,000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.