மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ரூ500 கோடி வர்த்தகம் பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அனைத்து வங்கிகளிலும் பணிகள் பாதிப்படைந்தன. பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 270 வங்கி கிளைகள் உள்ளன. இதில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் 975 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கியில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கலியுல்லா தலைமை தாங்கினார். சங்க தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சரவணன், நிர்வாகிகள் செந்தில்வேலன், சந்துரு, சையத் ஜமால், ரமேஷ், சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. தனியார் நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். சேமிப்பு கணக்குகளுக்கு கூடுதல் வட்டி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.