பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை உடையது பவானிசாகர் அணை. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பாசனத்துக்காக...
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கால்வாய் இரட்டைப்படை மதகுகளுக்கும் பாசனத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை சுழற்சி முறையில் 67 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
4-வது சுற்று தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்காக 2-ம் போகத்தின் இறுதி சுற்று தண்ணீரான 4-ம் சுற்று தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடியாக திறக்கப்பட்டது. இது நேற்று 17-ந் தேதி காலை 10 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த இறுதிச்சுற்று தண்ணீர் இம்மாதம் 30-ந் தேதி வரை திறக்கப்படும்.
நேற்று காலை 10 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 169 கனஅடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.