மாவட்ட செய்திகள்

மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பூஷன் தர்மாதிகாரி நியமனம்

மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பூஷன் தர்மாதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் பிரதீப் நந்திரஜோக். இவர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வுபெற்றார். இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியான பூஷன் பி.தர்மாதிகாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூஷன் தர்மாதிகாரி 16 ஆண்டுகள் மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஆவார்.

1959-ம் ஆண்டு பிறந்த பூஷன் தர்மாதிகாரி, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி மும்பை ஐகோட்டு கூடுதல் நீதிபதி ஆனார். மார்ச் 2006-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல் மாதம் ஓய்வு

இவர் தலைமையிலான அமாவு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2012-ல் தாய், மனைவி மற்றும் 2 வயது மகளை கொலை செய்த 25 வயது வாலிபரின் தூக்குதண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரீத்தி ரதி என்ற பெண் மீது திராவகம் வீசி கொலை செய்த அங்குர்(26) என்ற வாலிபரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதேபோல தமிழ் வாலிபர் ஏஞ்சலோ வல்தாரிசை கொலை செய்த 8 ரெயில்வே போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டவரும் பூஷன் தர்மாதிகாரி ஆவார். இதுதவிர பல்வேறு முக்கிய வழக்குகளை நீதிபதி பூஷன் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு அளித்து உள்ளது.

பூஷன் தர்மாதிகாரி வருகிற ஏப்ரல் 28-ந்தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். முன்னதாக கடந்த 13-ந்தேதி மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.தர்மாதிகாரி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.