மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம்: பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரிடம் விசாரணை நடத்த முடிவு

பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ விவகாரத்தில், அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வந்தவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் சுரேசை பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார், கணபதியையும், அதற்கு இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் தர்மராஜையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பணம் வாங்கிக்கொடுப்பதில் பலர் கணபதிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்ததும், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களிடமும் லஞ்சமாக பணம் பெற்றதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் அங்கு ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் என்று 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானசேகரன் கையில் பணக்கட்டுடன் இருக்கும் வீடியோ வெளியானது. அதில் அவர் 2 பேரிடம் பேசுவதும், இப்போதுதான் துணைவேந்தரிடம் பேசிக்கொண்டு இருந்தேன் என்று கூறுவதும், பின்பு பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை அவர் கேட்டு வாங்கி, அதை சரிபார்ப்பதும் அந்த காட்சியில் இடம்பெற்று இருந்தது.

அதுபோன்று அங்கு இருந்த 2 பேரும் சில நபர்களின் பெயரை குறிப்பிடுகிறார்கள். அவர்களிடம் ஞானசேகரன் நேர்காணல் மட்டும் நடக்கும், யாரையும் தேர்வு செய்ய மாட்டோம் என்று கூறுவதும், பின்னர் அவர்களிடம் இருந்து கத்தை கத்தையாக பணத்தை பெற்று துணைவேந்தரிடம் சேர்த்து விடுவேன் என்று கூறும் காட்சியும் இடம் பெற்று இருந்தது.

இந்த வீடியோ தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதை பார்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கணபதிக்கு லஞ்சம் வாங்கி கொடுத்ததற்கு வேதியியல் துறை தலைவர் தர்மராஜ் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்த நிலையில், தமிழ்த்துறை தலைவர் ஞானசேகரனும் கணபதிக்கு இடைத்தரகராக இருந்தாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

அந்த வீடியோவில் உள்ள குரல் தனது குரல் இல்லை என்றும், நான் பலருக்கு கடன் கொடுப்பேன், அவ்வாறு கடன் வாங்கியவர்கள் அதை திரும்ப கொடுப்பது வழக்கம். நான் யாருக்கும் லஞ்சம் வாங்கி கொடுக்கவில்லை. திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நான் பரிந்துரைக்கப்பட்டு இருந்தேன். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கும் விண்ணப்பிக்க இருந்தேன், எனவே என்னை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு உள்ளனர் என்று அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் குறித்து ஞானசேகரன் மறுத்தாலும், அவரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப துணைவேந்தராக பணியாற்றிய கணபதி லஞ்சம் வாங்கியது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருவது ஒருபுறம் இருக்க, அங்கு ஏராளமான ஊழல் நடந்து உள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

ஏற்கனவே பேராசிரியர் பணியிடத்துக்கு கணபதி, லஞ்சம் வாங்கியதில் பலர் உடந்தையாக இருந்துள்ளதை நாங்கள் கண்டுபிடித்து உள்ளோம். ஆனால் அதற்கு போதிய ஆதாரத்தை எங்களால் பெற முடியவில்லை. எனவே அதை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது தமிழ்த்துறை தலைவர் ஞானசேகரன் பணம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளதால், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் இது தொடர்பாக விரைவில் ஞானசேகரனிடம் விசாரணையும் நடத்த முடிவு செய்து உள்ளோம். அந்த வீடியோவில் பேசுவது அவருடைய குரல் தானா? யாரிடம் பேசுகிறார்? பணம் எதற்காக வாங்கினார்? எவ்வளவு பணம் வாங்கினார்? எப்போது வாங்கினார்?, லஞ்ச பணம் என்றால் அதை எப்போது கணபதியிடம் கொடுத்தார்? அதில் அவருக்கு கமிஷன் எவ்வளவு? என்பது தொடர்பாக விசாரணை நடத்துவோம்.

விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது உண்மை என்பது தெரியவந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வனிதாவிடம் கேட்டபோது, பாரதியார் பல்கலைக்கழக தலைவர் ஞானசேகரன் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி இருப்பது குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவாலிற்கும், உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். உயர்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.