புதுச்சேரி,
புதுவை கோரிமேட்டில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறையின் கீழ் செயல்படும் இங்கு 6 முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான அறைகள் உள்பட மொத்தம் 45 அறைகள் உள்ளன. இங்கு பராமரிப்பு குறைபாடுகள் குறித்து கவர்னர் கிரண் பெடிக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று காலை இந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கான அறைகளை பார்வையிட்ட அவர் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை விரைவில் சரி செய்யும்படி உத்தரவிட்டார்.
அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களிடம் நாள்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசினர் விருந்தினர் மாளிகையில் வசூலிக்கப்படும் கட்டணம், வரவு-செலவு குறித்த விவரங்களை அவ்வப்போது ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அதிகாரிகளிடம், அதிக நிதியை கொண்டு இந்த விடுதியை பராமரிக்க வேண்டும் என்பதால் பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். இன்னும் அனுமதி வரவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த கவர்னர் கிரண்பெடி, உடனடியாக குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் அந்த கட்டிடத்தின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கும் விடுதிகள் விரிவாக்க பணிகளை கிரண்பெடி பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது வளர்ச்சித்துறை ஆணையர் அன்பரசு, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் தேவன்சிங், இயக்குனர் வினய்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம், சொத்து வரி, வணிக வரிகளில் போன்றவை தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கேபிள் டி.வி. வருவாய் சரியாக கண்காணிக்கப்படவில்லை. இதில் அதிகப்படியான பாக்கி வசூலிக்கப்படாமல் உள்ளது. கேபிள் டி.வி. பாக்கி வருவாயை வசூலிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலத்தின் உள்வருவாயை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை மற்றும் ஓய்வூதியங்களை வழங்க ஏற்கனவே உள்ள வரி பாக்கிகளை வசூலிப்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.