கரூர்,
கரூர் ரோட்டரி கிளப் ஏஞ்சல்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனை முகாம் நகராட்சி பெண் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு கரூரில் நேற்று நடந்தது. இதில் நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் காலம், காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வெளியில் தெரியவருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைய ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது. இன்றைய கால பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன், தைரியமாக உள்ளனர். மார்பக புற்றுநோயை கண்டு பெண்கள் பயப்பட தேவையில்லை. மார்பக புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா, பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நகர்புறங்களில் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் இருப்பதை போல கிராமப்புறங்களிலும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டும். பிரதமர் மோடியிடம் ஏற்கனவே நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். அவரும் சுகாதார துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் கிடைக்க மத்திய அரசுடன் இணைந்து எனது (கவுதமி) பவுண்டேசன் சார்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மக்கள் முடிவு செய்வார்கள்
நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல திரைப்பட முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நான் கருத்து எதுவும் சொல்லவிரும்பவில்லை. அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு செயல்பாடுகளை வைத்து கருத்து சொல்ல முடியும்.
அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.