சின்னமனூர்,
சின்னமனூரில், பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவையொட்டி 2 நாட்கள் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
அதன்படி முதல் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலையில் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று மாலை 5 மணியளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், வீதிகளில் தேர் அசைந்தாடி சென்றது.
தேருக்குள் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு செக்காமுக்கு பகுதியில் தேர் நிறுத்தப்பட்டது. 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அங்கிருந்து தேரோட்டம் தொடங்குகிறது.
நகரின் முக்கிய இடங்களான கண்ணாடி கடைமுக்கு, காந்தி சிலை வழியாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை வழியாக தேரடியில் தேர்நிலை நிறுத்தப்பட உள்ளது. தேரோட்டத்தையொட்டி போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.