மாவட்ட செய்திகள்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் நிதி உதவி வேண்டி விண்ணப்பிக்கலாம்.

அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் இந்த மாதம் முதல் வருகிற மார்ச் மாதம் வரை உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் ஆகும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும்www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை, இயக்குனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT