வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.
கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்க கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.
கிறிஸ்துமஸ் விழா
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு பிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்தனர்.
ஏசு பிறப்பு நிகழ்ச்சி
நேற்று முன்தினம் இரவு ஏசு பிறப்பு நிகழ்ச்சியையொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிருபா ஆசீர்வாதம், மறையுரை தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜெபம் உள்ளிட்டவை நடந்தன. நள்ளிரவு 12 மணி அளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது விண்மீன் ஆலயத்தின் மேடையில் இருந்து குழந்தை ஏசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் பிரபாகர் எடுத்து சென்று பங்குத்தந்தை சூசை மாணிக் கத்திடம் கொடுத்தார்.
பின்னர் சூசை மாணிக்கம் அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை வைத்து ஏசு பிறந்ததை அனைவருக்கும் அறிவித்தார். இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.