காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாபுரம், வீரமலை, விளங்காமுடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களை சுற்றி உள்ள பகுதிகள் சுகாதாரமான முறையில் உள்ளதா? என பார்வையிட்டார். மேலும் டெங்கு கொசு பரவும் விதம் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கலெக்டர் கதிரவன் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், அசோகன், டாக்டர் சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள், கிராம நிர்வாக அலுவலர் வனஜா, சுகாதார ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மத்தூர் ஒன்றியம் கொடமாண்டப்பட்டி கிராமத்திலும் கலெக்டர் கதிரவன் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். மேலும் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்தும், விவசாய பாசனத்திற்கு நீர் செல்லும் கால்வாய் சீரமைக்கும் பணிகள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், ஆப்தாபேகம், ராஜசேகர், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.