மாவட்ட செய்திகள்

புளியந்தோப்பில் நண்பரை கத்தியால் வெட்டி பணம் பறித்த 4 பேர் கைது

நண்பரை கத்தியால் வெட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவரது மகன் விக்னேஷ் (வயது 17). சங்கர் தனது மகன் விக்னேசிடம் சேமிப்பு பணம் ரூ.1,500-ஐ கொடுத்து வைத்து இருந்தார்.

இதை அறிந்த அவரது நண்பர்கள் 7 பேர், நேற்று அம்பேத் கர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த விக்னேசிடம் சேமிப்பு பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் தர மறுத்ததால் ஆத்திரத்தில் விக்னேசை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.1,500-ஐ பறித்தனர்.

விக்னேசின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார், காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், கன்னிகாபுரத்தில் பதுங்கி இருந்த கோட்டை என்ற மணிகண்டன் (21), மனோ (26), குப்பன் என்ற அருண்குமார் (24) மற்றும் ஜோசப் (25) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT