மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.
இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு. இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் திகழ்ந்து வருகிறது. தொல்லியல் துறையின் பார்வையாளர் நுழைவு கட்டண வருவாயில் இந்திய அளவில் தாஜ்மகால் முதலிடத்திலும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த ஆண்டு 9 மாதங்களும், இந்த ஆண்டு 2 மாதங்களும் மூடப்பட்டு சுற்றுலா முடங்கியது. தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சுற்றுலாவுக்கு கடந்த ஜூன் 28-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட அனமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் என்பதால் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள பார்வையாளர் நுழைவு சீட்டு கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து தொல்லில் துறை நிர்வாகம் ஆன்லைன் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.40 கட்டணம் பெற்று கொண்டு தினந்தோறும் 5 ஆயிரம் பயணிகள் கண்டுகளிக்கலாம் என இலக்கு நிர்ணயித்து செல்போன் இணையதள சேவை மூலம் பார்வையாளர் சீட்டு வழங்கி வந்தது.
ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர். தற்போது வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிகின்றனர். இந்த இரு நாட்களில் பிற்பகல் 2 மணிக்கு 5 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட் எண்ணிக்கை இலக்கு முடிந்து, அதன்பின்னர் வரும் சுற்றுலா பயணிகள் சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பயணிகளின் இன்னல்களை அறிந்த மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் டெல்லியில் உள்ள மத்திய தொல்லியில் துறை தலைமை அலுவலகத்தின் அனுமதி பெற்று சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மாலை 2-மணிக்கு பிறகு இணைய வழியில் நுழைவு சீட்டு பெற முடியாமல் வந்த பயணிகளுக்கு தற்காலிகமாக கட்டண கவுண்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த சிக்கலை தவிர்க்க சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப இணைய வழி நுழைவு சீட்டுகளை அதிகப்படுத்த முடிவு செய்த மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தினந்தோறும் வழங்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தற்போது 5 ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.