மாவட்ட செய்திகள்

பெருந்துறை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி சமையல்காரர் சாவு; காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி

பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி சமையல்காரர் பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற நண்பரும் பலியானார்.

பெருந்துறை

பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி சமையல்காரர் பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற நண்பரும் பலியானார்.

சமையல்காரர்

பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் உள்ள கூட்டுறவு நகரில் வசித்து வந்தவர் ரஞ்சித் (வயது 31). ஆட்டோ டிரைவர். அவருடைய மகள் தமிழ்இனியா (1).

பெருந்துறை தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

அவருடைய மகன் பிரகதீஸ் (24). இவர் ரஞ்சித்தின் நண்பர் ஆவார். திருமணம் ஆகாத இவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.

மின்சாரம் தாக்கியது

ரஞ்சித் மேல் மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பிரகதீஸ் ரஞ்சித்தின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அவர் குழந்தை தமிழ் இனியாவை கையில் தூக்கி வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டி கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக பிரகதீஸ் கை வீட்டின் அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி மீது பட்டுள்ளது.

இதனால் அவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவரது கையில் இருந்த குழந்தை தமிழ் இனியா கீழே விழுந்தது. இதனால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

2 பேர் சாவு

இதை பார்த்த அருகே நின்றிருந்த ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார். உடனே பிரகதீசை காப்பாற்ற முயன்று அவரை பிடித்துள்ளார். இதனால் அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று 2 பேரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, பிரகதீசும், ரஞ்சித்தும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.