விழுப்புரம்
ஆலோசனை கூட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறவுள்ள அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-
மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், கழிவறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும், ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் அமைத்து பக்தர்கள் குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை கொட்ட வலியுறுத்தி குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்ற துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
கூடுதல் போலீசார்
போக்குவரத்துத்துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் மேல்மலையனூர் ஒன்றியத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் மின் தடைகளை சரிசெய்யவும், மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து புறக்காவல் நிலையம் மூலம் பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு, அவசர ஊர்திகள் மற்றும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கோவில் உதவி ஆணையர் ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.