மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை செங்குன்றத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல்ராஜ் (வயது 50). பெயிண்டர். இவருக்கு சசிகலா (47) என்ற மனைவியும், கேசவன் (27) என்ற மகனும் உள்ளனர். ஞானவேல்ராஜ் நேற்று காலை கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே மேம்பாலம் அருகே பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள வாகன உதிரி பாகங்களுக்கான கடையின் மாடியில் பெயிண்டு அடித்து கொண்டிருந்தார்.

அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியையொட்டி சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் ஞானவேல்ராஜின் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ஞானவேல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி பலியான ஞானவேல்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொக்லைன் எந்திர டிரைவர்

பொன்னேரி அருகே உள்ள சோழவரம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் பொக்லைன் எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. பொக்லைன் எந்திரத்தில் அதன் டிரைவரான விழுப்புரம் மாவட்டம் ஐவேலி கிராமத்தை சேர்ந்த பலராமன்(38) அமர்ந்திருந்தார். தேவனேரி கிராமத்தில் செல்லும் போது சாலையின் மேலே சென்ற மின்கம்பி பொக்லைன் எந்திரத்தில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பொக்லைன் எந்திர டிரைவரான பலராமன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரம் தாக்கி பலியான பலராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.