திருப்பூர்
கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்டனர்.
விவசாயிகள் மனு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். கூட்டத்தில் குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பயிர்க்கடன்
தமிழக முதல்-அமைச்சர் கடந்த 5-ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். ஆனால் தமிழ்நாடு அரசு உரிய காலத்தில் கடனை செலுத்தினால் வட்டி சலுகை கொடுத்து வருகிறது.
எனவே கடந்த 5, 6 ஆண்டு காலமாக விவசாயிகள் தமிழக அரசின் பயிர்க் கடனுக்கு வட்டி சலுகை பெறுவதற்காக, கடன் கட்ட முடியாத சூழ்நிலையிலும் தனியாரிடம் கடன் வாங்கி கூட்டுறவு கடனை செலுத்தி மீண்டும் கடனை புதுப்பித்து பயிர் க்கடன் பெறுகிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் கடன் நிலுவையில்லாமல் ஆண்டு தோறும் புதுப்பித்து கொண்டே இருந்து வருகின்றனர்.
தள்ளுபடி கிடைக்கவில்லை
இந்த நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடனை செலுத்திய விவசாயிகளுக்கும், ஜனவரி மாதம் அறிவிப்பு செய்த வரை கடனை புதுப்பிக்காமல் மறுகடன் வழங்காமல் சில கூட்டுறவு சங்கங்கள் காலதாமதம் செய்ததால் கடன் கட்டிய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை.
அதேபோல ஜனவரி 1-ந்தேதியிலிருந்து 4-ந்தேதி வரை கடனை செலுத்தி புதுப்பிக்க பணம் செலுத்திய விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை.
விவசாயிகள் பெரும்பகுதி அவர்கள் கையிலே பணம் வைத்துக் கொண்டு கடன் கட்டவில்லை. அரசின் வட்டி சலுகை பெறவே பணம் கட்டி உள்ளனர். இப்படி ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 10 முதல் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடன் தள்ளுபடி கிடைக்காமல் உள்ளனர்.
அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் விளைபொருட்களுக்கு விலை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் பெய்த மழையில் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளும் இருக்கின்றனர்.
100 பேருக்கு 20 பேர் வரை அதாவது ஐந்தில் ஒருவருக்கு கடன் தள்ளுபடி இல்லை என்கிற நிலை உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு கடன் பெற்ற அனைத்து விவசாயிகளும், கடந்த 5-ந் தேதி வரை கடனை செலுத்தி உள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி, தண்டுக்காரன்பாளையம், கானூர், வடுகபாளையம், நடுவச்சேரி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.