புதுச்சேரி,
புதுச்சேரி அரசிடம் இருந்து கடந்த 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு 38 கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 34 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.
குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் வழங்குவதற்கு பொது கணக்கில் இருந்து ரூ.123 கோடி முன்தொகை பெறுவதற்கு அனுமதி அளித்தல், கால்நடைத் துறையில் 16 கால்நடை உதவி அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கு சீனியாரிட்டி பட்டியல், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச அரிசி, பருப்பு வழங்கியதற்கு ரூ.1.32 கோடி செலவு, அரிசி, பருப்புகளை பார்சல் செய்து வினியோகம் செய்த வகையில் ரூ.34.44 லட்சம் செலவு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
மேலும் கடந்த 2019-20-ம் கல்வியாண்டிற்கு சென்டாக் மூலம் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., பொறியியல், பி.எஸ்சி. நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6.39 கோடி நிதி அளிப்பது, காரைக்காலில் 3,001 மீனவர்களுக்கும், மாகியில் 421 மீனவர்களுக்கும் ரூ.5,500 தடைக்கால நிவாரணம் வழங்க ரூ.1.88 கோடி வழங்குதல் உள்ளிட்ட பல கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
2 பி.சி.எஸ். அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு வழங்குவது குறித்து முடிவு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தகவலை கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.