செம்பட்டு,மார்ச்.31-
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 8.25 மணிக்கு வந்தார்.
அப்போது, அவரை மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை. பல்வேறு நாடுகளில் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் முக கவசம், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா 4-வது அலை வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன். இந்த அலை வருவதை தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். 12 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து 11.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.