மாவட்ட செய்திகள்

தாயுமானசுவாமி கோவிலில் குருபூஜை

தாயுமானசுவாமி கோவிலில் குருபூஜை நடந்தது.

ராமநாதபுரம்,

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்று பாடிய தாயுமானவர் திருத்தலங்கள் தோறும் சென்று இறைவழிபாடு செய்து, ராமநாதபுரம் லட்சுமிபுரம் பகுதியில் மகாசமாதி அடைந்தார். தாயுமானவர் பராபரமே, வானாகி மண்ணாகி உள்ளிட்ட பல பாடல்களை எழுதியவர். 56 தலைப்புகளில் 1,452 பாடல்கள் எழுதியுள்ளார். தவத்தின் மூலம் சிவத்தை கண்ட தாயுமானவருக்கு ராமநாதபுரம் லட்சுமிபுரம் பகுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் எழில்மிகு அழகுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தவக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு அளித்த தாயுமானவர் முக்தியடைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் நினைவிடத்தில் தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவரது அடியார்கள் குருபூஜை நடத்தி வருகின்றனர். இதுதவிர, தாயுமானவருக்கு நாள்தோறும் மூன்றுகால பூஜையும், மாதந்தோறும் விசாகத்தன்று சிறப்பு வழிபாடும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரது குருபூஜை விழா அவரது நினைவிடம் அமைந்துள்ள தாயுமானசுவாமிகள் தபோவனத்தில் நடைபெற்றது. முன்னதாக கடந்த 2 நாட்களாக தாயுமானவர் பாடல்களும், திருவாசகமும் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று சிவநாம ஜபம், ஸ்படிக லிங்கத்தின் வாயிலாக தாயுமானவருக்கு அபிஷேகம், சிவசகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தாயுமானவர் சிலைக்கு மலர்தூவி வழிபாடு செய்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு மூலவர் தாயுமானவரின் சன்னதிக்குள் பக்தர்கள் சென்று மலர் தூவி வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சுவாமி ருத்ரானந்தர் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது

SCROLL FOR NEXT