பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி அனுசியா (வயது 35), அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி சிந்துபைரவி (28). கட்டிட தொழிலாளிகளான அனுசியாவும், சிந்துபைரவியும் நேற்று மாலை பெரம்பலூரில் பணியை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து தீரன் நகரை நோக்கி சென்ற போது, ஸ்கூட்டர் திடீரென்று கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அகரம் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி (65) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனுசியா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிந்துபைரவி, சின்னதம்பி ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அனுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.