மாவட்ட செய்திகள்

12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

இருக்கன்குடி அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சாத்தூர்,

இருக்கன்குடி அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் பழமையான கல்வட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நத்தத்துப்பட்டி கிராமத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளன. இங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முற்காலப்பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன், ஸ்ரீவல்லபன் காலத்து (கி.பி. 815-862) கல்வெட்டு ஒன்றும், கி.பி. 12-ம் நூற்றாண்டு செக்குக்கல் கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து எனக்கு நத்தத்துப்பட்டியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் திருமுருகன் தகவல் அளித்தார். இதையடுத்து நானும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரனும் ஆய்வு மேற்கொண்டோம்.

சிறப்புப்பெயர்

பாண்டிய நாட்டில் முற்காலப்பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் அதிகாரியாகவும், இருப்பைக்குடியை தலைநகராக கொண்ட நாட்டின் தலைவனாக விளங்கியவன் எட்டிசாத்தன்.

அவனுக்கு இருப்பைக்குடி கிழவன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த இருப்பைக்குடி தற்போது இருக்கன்குடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்வெட்டில் இரண்டு வரிகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட 9-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஆகும். அதில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு இருப்பைக்குடி கிழவன் திருப்பீடம் அமைத்து தந்ததை கூறுகிறது.

சாத்தூர் வட்டாரத்தில் இருப்பைக்குடி கிழவன் ஏராளமான நீர்ப்பாசன வசதிகளை செய்துள்ளார். புதிதாக ஏரிகளை தோற்றுவித்துள்ளார்.

சிவன் கோவில்

பழைய ஏரிகளை புதுப்பித்துள்ளார். இதனை பற்றி தெரிவிக்கும் பழமையான பாடல் கல்வெட்டு ஒன்று நத்தத்துப்பட்டிக்கு அருகில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த பாறை சிதைக்கப்பட்டதால் கல்வெட்டு அழிவுற்றது. இப்பாடல் கல்வெட்டில் இருப்பைக்குடி கிழவன், இருக்கன்குடி பகுதியில் கோவில் ஒன்றை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது கண்டறியப்பட்ட வட்டெழுத்து பொறிக்கப்பட்ட இத்திருப்பீடம் இருப்பைக்குடி கிழவன் எடுப்பித்த கோவிலின் பலிபீடமாக இருக்கலாம்.

மேலும் இந்த இடத்திற்கு சற்று அருகிலேயே பெரிய உருவிலான நந்தி உள்ள கோவில் ஒன்றும் இருப்பதால் முன்னர் சிவன் கோவில் ஒன்று இவ்விடத்தில் இருப்பதை அறிய முடிகிறது.இரண்டாவதாக ஊரில் இருக்கும் மற்றொரு கல்வெட்டில் இருப்பைக்குடி ஏனாதியான கோட்டாறன் சித்தன் அமைத்துக் கொடுத்த உரலை பற்றிய செய்தி தெரிவிக்கின்றது.

கல்வெட்டில் காணப்பட்ட வாசகத்தின் எழுத்தின் தன்மையை நோக்கும்போது இது கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.