அரியலூர்,
ஆண்டுதோறும் ஜூன் 26-ந்தேதி சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூரில் அந்தந்த மாவட்ட போலீசார் சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது.
அரியலூரில் தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கொடிசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் அரியலூர் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா மற்றும் போலீசார், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
இதே போல பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்பணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ரோவர் ஆர்ச்சில் முடிவடைந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர் சரகம்), தேவராஜ் (மங்களமேடு சரகம்) மற்றும் போலீசார், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர், பெரம்பலூரில் நடந்த சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் ஏந்தி கொண்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் சென்றனர். சாராயம் மற்றும் போதை பொருட்கள் பற்றிய புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581-ஐ 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தினர்.
வி.கைகாட்டி
இதே போல் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் கயர்லாபாத் போலீசார் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். வி.கைகாட்டி ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. இதில் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜவேல், நடேசன் மற்றும் போலீசார், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.