மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் தொல்லை

பவானிசாகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரான 19 வயது தொழிலாளி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு தூக்கி சென்றார்.

பின்னர் வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் சிறுமியை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போக்சோவில் கைது

பின்னர் சிறுமி வீட்டுக்குள் சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

20 ஆண்டு சிறை

வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, நேற்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.