மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரத்தில் ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி இளம்பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வடுகன்பற்றுபகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருடைய மனைவி ரேணுகா (வயது57). இவர் சம்பவத்தன்று இரவு 7.20 மணியளவில் தனது மகள் மதுவர்தனி (20) என்பவருடன் ஸ்கூட்டரில் இருளப்பபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை ரேணுகா ஓட்டி சென்றார்.
அவர்கள் சுசீந்திரம் புறவழி சாலையில் ராகவேந்திரா கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ரேணுகா ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதினர். இதில் ரேணுகாவும் மதுவர்தனியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே மர்ம நபர்கள் மதுவர்தனியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர்.
போலீசில் புகார்
இதையடுத்து அவர்கள் திருடன்... திருடன்... என கூச்சலிட்டனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்காணிப்பு கேமரா
மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார். மேலும், கொள்ளையர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.