மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற சரக்கு வேன் மீது கார் மோதல்; 2 பேர் பலி

மணப்பாறை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வையம்பட்டி, டிச.28-
மணப்பாறை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சரக்கு வேன் மீது மோதிய கார்
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்த அன்னக்கொடி மாயன் (வயது 50), முகமது அஸ்லம் (40), வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் திருச்சியில் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் காரில் வந்தனர். பின்னர் மீண்டும் இரவில் காரில் சென்றனர்.
கார் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டி பிரிவு சாலை என்ற இடத்தில் வந்தது. அப்போது, தஞ்சாவூரில் இருந்து மதுரை மாவட்டம், வாடிப்பட்டிக்கு ரஸ்க் தூள் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வேன் பஞ்சராகி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. இதனிடையே எதிர்பாராத விதமாக கார் அந்த சரக்கு வேன் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
2 பேர் பலி
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அன்னக்கொடி மாயன், முகமது அஸ்லம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜனனி பிரியா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதனை சீர் செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்விடம்
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஆங்காங்கே இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடத்தில் மட்டுமே ஓய்விடம் உள்ளன. இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பழுதாகி நின்று விட்டால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடியினர் உடனே அந்த இடத்திற்கு சென்று விபத்து நிகழாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அந்த நடைமுறையே இல்லை. இதன் காரணமாகத்தான் வாகனங்கள் சாலையோரங்களில் நிற்பதும் அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT