ஈரோடு
பவானி, சிவகிரி, கோபி பகுதி கோவில்களில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
சிவகிரி
சிவகிரியில் புகழ்பெற்ற வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி காலை 7 மணி அளவில் வள்ளி-தெய்வானை, வேலாயுதசாமிக்கு மணமக்கள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 7.15 மணி அளவில் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பவுர்ணமியையொட்டி நேற்று நடந்தது.
இதற்காக வள்ளி-தெய்வானையுடன் வேலாயுதசாமி பெரிய தேரிலும், விநாயகர் சிறிய தேரிலும் எழுந்தருளினார்கள். மொடக்குறிச்சி தொகுதி சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த தேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் நிலை சேர்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி அளவில் நடராஜர் தரிசனம் நடைபெற உள்ளது.
கோபி
அதேபோல் கோபி அருகே உள்ள பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், மஞ்சள் நீர் உற்சவம், நடராஜர் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பவானி
பவானியில் சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 5 மணி அளவில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் பசவர் ஜங்க அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதற்காக சங்கமேஸ்வரரும், வேதநாயகி அம்மனும் ஒரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் பூக்கடை பிரிவு, வி.என்.சி கார்னர், தேர் வீதி வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. மேலும் சிவனடியார் கூட்டத்தின் சார்பில் தேவாரம் திருவாசகம் ஓதப்பட்டது.
கிரிவலம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று சென்னிமலை கிரிவல பவுர்ணமி அறக்கட்டளை சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையை கிரிவலம் சுற்றி வந்தனர்.
சென்னிமலை அடிவாரத்தில் இருந்து முருகப்பெருமானை அலங்கரித்து வாகனத்தில் வைத்து இழுத்துக்கொண்டு தட்டாங்காட்டுப்புதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், தோப்புப்பாளையம், தொட்டம்பட்டி பள்ளக்காட்டுப்புதூர் வழியாக கிரிவலம் சுற்றி வந்தனர். கிரிவலம் சுற்றி வரும் வழியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமி விழா
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சந்தன அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதற்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மடவிளாகம் சென்று கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் நொய்யல் நதிக்கரையில் தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதன்பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு மாரியம்மனுக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
மேலும் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சி சோளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பக்தர்கள் மடவிளாகம் சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு மேல் சோளியம்மனுக்கு தீர்த்த அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காவிரி கரையில் பிரசித்தி பெற்ற அகோர வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரா பவுர்ணமி விழா கடந்த 15-ந் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி பூஜை, கொடியேற்றம், அபிஷேக ஆராதனை போன்றவை நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு சாமி சத்தாபரண ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் வேள்வி பூஜைகள் நடந்தது. இதையடுத்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அகோர வீரபத்திர சாமியின் தெப்ப ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சாமி எழுந்தருளினார். பின்னர் பரிசல்கள் புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் சென்றது. அகோர வீரபத்திர சாமி கோவிலில் இருந்து தொடங்கி அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றில் ஊர்வலம் சென்றது.
பின்னர் அங்கிருந்து அகோர வீரபத்திர சாமி கோவிலை ஊர்வலம் சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கோவிலில் வசந்த உற்சவ நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மறுபூஜை நடைபெறுகிறது.
விழாவில் அம்மாபேட்டை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, சேலம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் விழா நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தார்கள். அந்த புனிதநீரை கொண்டு செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 1 மணி அளவில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியபடி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மாவிளக்கு ஊர்வலமும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.